பேருந்து பயணத்திற்கான மாதாந்திர பயணச் சீட்டு வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேருந்துக் கட்டண உயர்வுக்குப் பிறகு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது, இந்நிலை விரைவில் சரியாகும்” என்று கூறினார்.
“மாதாந்திர பஸ் பாஸில் சில முறைகேடுகள் நடைபெறுவதால், அதனைத் தடுப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதனால், தற்போதைக்கு மாதாந்திர பயணச் சீட்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், “புதிய பேருந்துகள் இன்னும் நான்கு மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும். வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தில் 4 ஆயிரம் புதிய பேருந்துகளுக்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார். மின்சார பேருந்துகளின் விலை அதிகமாக இருப்பதால் , அதற்கு மத்திய அரசிடம் இருந்து மானியம் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன” எனவும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சரின் இன்றைய அறிவிப்பு அதிர்ச்சியடைய வைத்துள்ளது.