முதல் தேர்தலிலேயே முழுவெற்றி! சாதனை படைத்தார் ஸ்டாலின்!

After assuming as dmk president, stalin won all seats in first parliment election

by எஸ். எம். கணபதி, May 24, 2019, 10:02 AM IST

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் பொது தேர்தலாக அவர் சந்தித்தது இந்த நாடாளுமன்றத் தேர்தலைத்தான். இதில் தி.மு.க. போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஸ்டாலின் பெரிய சாதனை படைத்திருக்கிறார்.

தி.மு.க. தலைவராக ஐம்பதாண்டுகளாக கோலோச்சி, தமிழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மு.கருணாநிதி. இவரது மகன் மு.க.ஸ்டாலின் தந்தை வழியில் சிறுவயது முதலே அரசியலில் ஆர்வம் காட்டினார். கடந்த 1984ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.தி.மு.க.வை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக முதன்முதலில் போட்டியிட்டார். அப்போது அ.தி.மு.க.வின் கே.ஏ.கிருஷ்ணசாமியிடம் ஸ்டாலின் தோற்றார். அடுத்து, 1989ம் ஆண்டில் அதே தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால், 1991ல் மீண்டும் கே.ஏ.கே.விடம் தோற்றார்.

அதன்பின், 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2011, 2016 தேர்தல்களில் கொளத்தூர்  சட்டமன்றத் தொகுதியில் வென்றார். தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். கட்சியில் இளைஞர் அணி செயலாளர், பொருளாளர், செயல்தலைவர் என்று படிப்படியாக உயர்ந்த ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் செயல்தலைவராக இருந்த போது கடந்த 2017 டிசம்பரில் நடைபெற்ற ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. அதற்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. அந்த தேர்தலில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க கருணாநிதி எவ்வளவோ முயன்ற போதும், விஜயகாந்தை பொருட்படுத்தாமல் ஸ்டாலின்தான் ஒதுக்கியதால், ஆட்சியை இழக்க நேரிட்டது என பேசப்பட்டது.

இந்த நிலையில், ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்ற பின்பு, தி.மு.க சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்தான். இந்த தேர்தலில் தமிழகம்,புதுச்சேரியை அடக்கிய 40 தொகுதிகளில் தி.மு.க. 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் 2, இந்திய கம்யூ.2, வி.சி.க.2, மதிமுக, முஸ்லீம்லிக், கொமதேக, ஐஜேகே என்று பங்கீடு செய்து போட்டியிட்டன.

இதில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. தி.மு.க. போட்டியிட்ட மீதி 19 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அது மட்டுமல்ல, ஐஜேகே, கொமதேக, முஸ்லீம்லீக், வி.சி.க., ஆகியவை தலா ஒரு தொகுதியில் உதயசூரியனில் போட்டியிட்டதால், இவையும் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வாகவே கருதப்படும். எனவே, தி.மு.க. எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தற்போதயை நிலையில், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க., காங்கிரசுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. மூன்றாவது கட்சியாக இருந்தது. அப்போது திமுக ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை வரலாறு மாறியிருக்கிறது. அ.தி.மு.க. ஒரே தொகுதியில் மட்டும்தான் வென்றுள்ளது.

இந்த வகையில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றதற்கு பிறகு சந்தித்த முதல் தேர்தலிலேயே வலுவான கூட்டணி அமைத்தது, சரியான வேட்பாளர்களை தேர்வு செய்தது, இரவு, பகல் பாராமல் கணிப்புகளை பற்றி கவலைப்படாமல் முழு மூச்சாக பிரசாரம் செய்தது என்று ஒவ்வொரு விஷயத்திலுமே ஸ்டாலின் வெற்றி கண்டிருக்கிறார். அதனால்தான், முதல் தேர்தலிலேயே அவருக்கு முழு வெற்றியை தமிழக மக்கள் அளித்துள்ளனர். அடுத்து சட்டசபைத் தேர்தலிலும் ஸ்டாலின் இதே போல் தனது உழைப்பால் ஆட்சியைப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கிறது!

You'r reading முதல் தேர்தலிலேயே முழுவெற்றி! சாதனை படைத்தார் ஸ்டாலின்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை