‘‘நீங்கள் சொன்னது என்னாச்சு? எப்போது ராஜினமா செய்யப் போகிறீர்கள்?’’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. சவால் விட்டுள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது கரூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மந்திரி பதவி கொடுத்து விட்டு, செந்தில்பாலாஜியை ஓரம்கட்டினார் ஜெயலலிதா, அது முதல் விஜயபாஸ்கருக்கும், செந்தில்பாலாஜிக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
அரசியலில் தன்னை மட்டம் தட்டி வந்த செந்தில்பாலாஜியை, தனது அமைச்சர் பதவி மூலம் ஒன்றும் இல்லாமல் செய்ய முயற்சித்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர், தனது இல்லத்திருமண விழாவுக்கு முதலமைச்சர் எடப்பாடியை அழைத்து பிரம்மாண்டமாக நடத்தினார். கரூர் மாவட்டத்தில் இனி செந்தில்பாலாஜியால் எந்த அரசியலும் செய்ய முடியாது என்று ஓங்கி ஒலித்தார். அதுமட்டுமல்ல. ‘‘செந்தில்பாலாஜி இன்னொரு முறை எம்.எல்.ஏ.வாக ஜெயித்து விட்டால், நான் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலை விட்டு விலகுகிறேன்’’ என்று அவசரப்பட்டு சவாலும் விட்டார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது மட்டுமின்றி, டி.டி.வி. ஆதரவாளராக மாறியதால், எம்.எல்.ஏ. பதவியும் பறிபோனது. ஆனாலும், டி.டி.வி. அணியில் சிறிது காலம் இருந்தார். அப்போது, அவருக்கு இனியும் இந்த அணியில் இருந்தால் விஜயபாஸ்கர் சொன்னது போல் தான் அரசியலில் செல்லாக்காசு ஆகி விடுவோம் என்பதை உணர்ந்த அவர், தி.மு.க.வில் இணைந்து விட்டார்.
இதன்பின், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் இம்முறை போட்டியிட்ட செந்தில்பாலாஜி அமோக வெற்றி பெற்று விட்டார். தேர்தலின் போது, அவர் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஜெராக்ஸ் காப்பியை டோக்கனாக கொடுத்ததாக, விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார். ஆனால், அதெல்லாம் எடுபடவில்லை.
இந்நிலையில், எல்லோரும் எதிர்பார்த்தது போல் அந்த கேள்வியை கேட்டு விட்டார் செந்தில்பாலாஜி. ‘‘என்ன அமைச்சரே, நீங்கள் சொன்னது என்னாச்சு? எப்போது பதவியை ராஜினாமா செய்யப் போகிறீர்கள்?’’ என்று கேட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல. அமைச்சர் விலகினால், கரூர் தொகுதியிலும் தி.மு.க.வை வெற்றி பெறவைத்து காட்டுகிறேன் என்றும் செந்தில்பாலாஜி இப்போது சவால் விட்டிருக்கிறார்.
இது கரூர் மாவட்ட அரசியல் புள்ளிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டு அவருடன் சுற்றி வருபவர்களே மற்றவர்களிடம் அமைச்சர் போட்ட சவாலை கூறி, கிண்டலடித்து வருகிறார்கள்.