கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு!

dmk alliance party m.p.s met m.k.stalin.

by எஸ். எம். கணபதி, May 25, 2019, 11:28 AM IST

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை கூட்டணி கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளின் புதிய எம்.பி.க்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 37 இடங்களையும், புதுச்சேரியையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றும் மொத்தத்தில் ஒரேயொரு தொகுதியில் அந்த அணி வென்றது.

இந்நிலையில், தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக கட்சியினரின் கூட்டம் அலைமோதுகிறது. எந்த நேரமும் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றுள்ள எம்.பி.க்கள், அக்கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் போராடுவார்கள். நீட்தேர்வு விலக்கு, காவிரிப் பிரச்னை என்று எல்லா பிரச்னைகளுக்கும் குரல் கொடுப்பார்கள்’’ என்றார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், அங்கு காங்கிரஸ் சார்பில் வென்ற வைத்தியலிங்கமும் அறிவாலயத்திற்கு வந்து ஸ்டாலினை சந்தித்தனர். அதன்பின், நாராயணசாமி கூறுகையில், ‘‘காங்கிரஸ் கடுமையாக உழைத்தது. ஆனாலும், வடமாநிலங்களில் தோல்வியடைந்துள்ளது. தேர்தல் வியூகத்தை மாற்றி, இனி மாற்று வியூகங்களை அமைப்பது பற்றி ஆலோசிப்போம்’’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் மற்றும் அக்கட்சி எம்.பி. நவாஸ்கனியும் வந்து ஸ்டாலினை சந்தித்தனர். பின்னர், காதர் மொய்தீன் கூறுகையில், ‘‘தமிழகத்தைப் போல், அகில இந்திய அளவில் மதசார்பற்ற கூட்டணியை காங்கிரஸ் வலுவாக அமைத்திருந்தால், நிச்சயமாக வடமாநிலங்களிலும் வென்றிருக்கும். தி.மு.க. தலைவர் கருணாநிதி போல் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்’’ என்றார்.

You'r reading கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை