ஆன்மீக அரசியல் எடுபடுமா? ரஜினி துணிவுடன் வருவாரா?

Will Rajini enter politics after seeing Dmk victoty in m.p. elections?

by எஸ். எம். கணபதி, May 25, 2019, 12:27 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புகள் முடிந்ததும் மீடியாக்களுக்கு தீனி போடும் அடுத்த தலைப்பாக ரஜினி அரசியல்தான் கைகொடுக்கும். காரணம், ரஜினி கடைசியாக வெளியிட்ட அறிவிப்புதான். ‘‘சட்டமன்றத் தேர்தல் எப்ப வந்தாலும் அதை சந்திக்கத் தயார்’’ என்று ஓங்கிச் சொல்லியிருந்தார். அதே போல், நதிகள் இணைப்பு திட்டத்தை பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்ததை வரவேற்று, மறைமுகமாக தனது ஆதரவையும் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது பா.ஜ.க. கூட்டணி 352 இடங்களுடன் அபாரமான வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடிக்கு ரஜினி வாழ்த்து கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, தமிழகத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தற்போது இடைத்தேர்தலில் பெற்ற 8 தொகுதிகளி்ன் வெற்றியால் பெரும்பான்மையை பெற்றுள்ளது. எனவே, எடப்பாடி அரசு 2021ம் ஆண்டு வரை நீடிக்கப் போகிறது. ஏற்கனவே பா.ஜ.க. அணியில் அ.தி.மு.க. இருப்பதால், ஆட்சிக்கு ஆபத்து வராது. ஒருவேளை, பா.ஜ.க. வேறு திட்டம் போல் அரசியல் மாறலாம்.

அதாவது, அ.தி.மு.க. அரசு மீதான குட்கா ஊழல் முதல் டெண்டர் ஊழல் வரை எல்லா கோப்புகளையும் மத்திய அரசு தூசி தட்டி எடுத்தால், ஆட்சிக்கு ஆபத்து வரலாம். அப்படி எடப்பாடி அரசு கவிழும் நிலை ஏற்பட்டால், உடனடியாக ஆட்சி அமைக்க தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்வர மாட்டார். மாறாக, பொது தேர்தலை சந்திக்க தயாராவார். காரணம், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த வாக்குகள்தான்.

இதற்கிடையே, தேர்தலுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்ப்போம். மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க, தினகரனால் பிளவுபட்ட போதும், எடப்பாடி அரசை பா.ம.க, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்த போதும் தி.மு.க. தரப்பில் உற்சாகமாக இருந்தனர். ஆனால், பா.ஜ.க திடீரென களம் இறங்கியது, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்கு இழுத்தது போன்றவை ஸ்டாலினுக்கு பயத்தைக் கொடுத்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பா.ஜ.க.வினர் சந்தித்து உடல்நலம் விசாரித்தவுடன், ஸ்டாலினும் நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். தி.மு.க. அணிக்கு தேமுதிகவை இழுக்க முயன்றனர். ஆனால், தேமுதிக எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் அது நடக்கவில்லை.

இந்த சூழலில், பா.ஜ.க., பா.ம.க, தே.மு.தி.க, புதியநீதிக் கட்சி, புதிய தமிழகம் என்று பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்து களம் கண்டது. ஆனால், வேலூரை தவிர தேர்தல் நடத்தப்பட்ட மீதி 38ல் 37 தொகுதிகளை தி.மு.க. கூட்டணி வென்றெடுத்துள்ளது. தேனியில் மட்டும் நீண்ட இழுபறிக்கு பின்னர் அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். அது மட்டுமல்ல. டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க, கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம்தமிழர் ஆகிய கட்சிகள் எல்லாமே மோடி எதிர்ப்பு வாக்குகளை சிதறடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதையும் தாண்டி, தி.மு.க. அணி வேட்பாளர்கள் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்கள்.

இந்த வெற்றிக்கு பின்பு மீடியாக்களிலும், சமூக ஊடகங்களிலும் திராவிட ஆதரவு பிரச்சாரம் தலைதூக்கியிருக்கிறது. ‘‘தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை, இது பெரியார் பிறந்த மண், தமிழகம் என்றும் தனித்துவம் பெற்ற மாநிலம், இங்கு பா.ஜ.க.வின் மாயவேலை எடுபடாது, தாமரை ஒரு காலமும் மலராது...’’ என்று மீண்டும் ஒரு தேர்தல் பிரச்சாரம் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது மீண்டும் மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே அவர் பேசிய ‘ஆன்மீக அரசியல்’தான். பாபா முத்திரையுடன் ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட பா.ஜ.க.வின் பிரதிபலிப்பாக அவர் அரசியல் பேச ஆரம்பித்திருந்தார். அதற்கு ஒரு திசையில் அப்போதே எதிர்ப்பு வந்தது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை அவர் சந்தித்த போது காயமடைந்து மருத்துவமனையில் இருந்த ஒருவர் ரஜினியிடம், ‘‘நீங்கள் யார்?’’ என்று வேண்டுமென்றே கேட்க, அது பெரிய செய்தியானது. அதில் கோபமுற்ற ரஜினி சென்னைக்கு திரும்பியதும், ‘‘தூத்துக்குடியில் வன்முறைக்கு காரணமே போராட்டத்தை தூண்டி விட்ட சமூக விரோதிகள்தான்’’ என்று கூறிவிட்டார். அதுவும் சர்ச்சையாகி விட்டது.

ஏனென்றால், நூறு நாட்களாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் வேண்டுமென்றே துப்பாக்கிச்சூடு நடத்தி, அப்பாவி மக்களை கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக காணப்பட்ட நேரம் அது.

இப்போது தேர்தலில் பா.ஜ.க. தலைவர் தமிழிசையை விட மூன்றரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க.வின் கனிமொழி வெற்றி பெற்றிருக்கிறார். இது போன்ற சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஆராயாமல், ரஜினி எந்தவொரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டார். ஏற்கனவே அவரது வாய்ஸாக பேசும் தமிழருவி மணியன் கடைசியாக, ‘‘அ.தி.மு.க. அரசு போன பிறகுதான் ரஜினி அரசியலுக்கு வருவார்’’ என்று கூறியிருக்கிறார்.

எனவே, மத்திய பா.ஜ.க, அரசு ஏதாவது ஒரு வகையில் எடப்பாடிஅரசை வீட்டுக்கு அனுப்பினால்தான், ரஜினி தனது அரசியல் பயணத்தை துவங்குவார் என தெரிகிறது. அப்படியே வந்தாலும் அவரது ஆன்மீக அரசியல் தமிழகத்தில் எடுபடுமா என்பது தெரியவில்லை. அது மட்டுமல்ல, அவர் ஆன்மீக அரசியலை கையில் எடுத்தால், அதுவே தி.மு.க.வினருக்கு வசதியாக போய் விடும். இவ்வளவு நாளாக ரஜினி வந்தால், தி.மு.க.வுக்கு பெரிய சவாலாக இருப்பார் எ்ன்று பயந்த உடன்பிறப்புகள் இப்போது துணிவுடன் அவரை வரவேற்பார்கள். ஆனால், ரஜினிக்கு அந்த ஆன்மீக அரசியல் துணிவு  இப்போது வருமா என்பது தெரியவில்லை.

அதனால், தற்போதைக்கு அவர் மீண்டும் திரைப்படங்களில் கவனம் கொள்ளவே விரும்புவார். ஏற்கனவே அவர் ஐந்து படங்களில் நடிப்பதற்கு பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படியோ, மீடியாக்களுக்கு விவாதிக்கப் பொருள் இல்லாவிட்டால் ரஜினியை அவ்வப்போது இழுத்து கொள்ளலாம்!

You'r reading ஆன்மீக அரசியல் எடுபடுமா? ரஜினி துணிவுடன் வருவாரா? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை