அத்திவரதர் தரிசனம் கூடுதல் வசதிகள், சிறப்பு அதிகாரிகள் நியமனம் - தலைமை செயலாளர் தகவல்

by Nagaraj, Jul 21, 2019, 12:16 PM IST
Share Tweet Whatsapp

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் தரிசனம் கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. 48 நாட்களுக்கு அத்தி வரதர் காட்சி தர உள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் அதிகளவில் பக்தர்கள் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து செல்கின்றனர். சில நாட்களாக தினமும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவதால் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஐந்து பேர் இறந்துள்ளனர். இதற்கு போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததும் காரணம் என்று புகார்கள் எழுந்தன.


இதையடுத்து காஞ்சிபுரத்தில் ஆய்வு நடத்துமாறு தலைமை செயலாளர் சண்முகம், சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று உத்தரவிட்டார். இதனால் இருவரும் காஞ்சிபுரத்தில் நேற்றிரவும், இன்றும், அத்தி வரதர் தரிசனம் நடைபெறும் கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், அத்தி வரதர் தரிசனம் முடியும் வரை, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய கூடுதல் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. கூடுதல் கழிப்பறை வசதி, குடிநீர், மின்வசதி மற்றும் நிழற் பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேட்டரி கார் மற்றும் வீல் சேர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்றார்.


இதே போல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளிலும் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், கூட்ட நெரிசலை சமாளிக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.


Leave a reply