தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சம்பத், விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 28ம் தேதி முதல் 13 நாட்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முனைவோர்களை சந்தித்து, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு லண்டன் மற்றும் நியூயார்க்கில் சில கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கொண்ட குழு அங்கு செல்கிறது.
சென்னையில் இருந்து இம்மாதம் 28ம் தேதி புறப்படும் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர், முதலில் லண்டன் செல்கின்றனர். 29ம் தேதி லண்டனில் சுகாதாரத் துறை தொடர்புடைய தொழில் முதலீட்டாளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுகிறார், இந்த சந்திப்பு முடிந்ததும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்னை திரும்புகின்றனர்.
இதன்பின், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் 30ம் தேதி கிளாஸ்கோவில் எரிசக்தி துறை முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்கிறார்கள். செப்டம்பர் 1ம் தேதியன்று லண்டனில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு செல்கின்றனர்.
அங்கிருந்து பப்பலோ நகருக்கு சென்று, கால்நடை பராமரிப்பு தொழில் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை பெறுகின்றனர். 3ம் தேதி மீண்டும் நியூயார்க் வந்து, அன்று மாலை 6 மணிக்கு நியூயார்க்கில் நடைபெறும் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்கிறார். இரவு 7.30 மணிக்கு ‘யாதும் ஊரே’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்த தமிழக முதலீட்டாளர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
நியூயார்க்கில் இருந்து 4ம் தேதி புறப்பட்டு, சான் பிரான்சிஸ்கோவுக்கு முதல்வர் சென்று முதலீட்டாளர்களோடு கலந்துரையாடுகிறார். செப்டம்பர் 5-ம் தேதி தெல்சாவில் உள்ள தொழிற்சாலையையும், பிரபலமான பண்ணையையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார் இதன்பின், செப்டம்பர் 7ம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து துபாய் செல்கிறார். துபாயில் இருந்து 8-ம்தேதி புறப்பட்டு, 9-ம் தேதி அதிகாலை 2.45 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி சென்னை வருகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அவரது செயலாளர்கள் சாய் குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோரும் செல்கின்றனர்.