சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது.
இதன்பின், ஒரு வாரத்தில் தங்கம் விலை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரி்த்தது. ஆக. 7ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.568 அதிகரித்து, சவரன் விலை ரூ.28,352க்கு விற்றது.
கடந்த வாரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.3618க்கும், சவரன் விலை ரூ.28,944க்கும் விற்றது. நேற்று காலையில் ஒரு கிராம் ரூ.3621க்கும், சவரன் ரூ.28,968க்கும் விற்பனையானது. மாலையில் சவரனுக்கு ரூ.168 வரை விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.3600க்கும், சவரன் ரூ.28,800க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று(ஆக.24) காலையில் சென்னை தங்க மார்க்கெட்டில் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.3,680க்கு விற்றது. அதாவது, நேற்றிரவுக்குள் ஒரு சவரனுக்கு ரூ.640 விலை உயர்ந்து சவரன் விலை ரூ.29,440 ஆனது. நாளை அல்லது அடுத்த 2 நாளில் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை தொடும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை நிலவரத்திற்கு ஏற்ப சென்னை சந்தையிலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மூலதனச் சந்தை நிலவரம், சர்வதேச பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. மும்பைச் சந்தையைப் போல் இங்கும் தங்கம் விலையில் சிறிது ஏற்ற இறக்கம் காணப்பட்டாலும், விலை உயர்வு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே, அடுத்த ஓரிரு நாளில் சவரன் விலை ரூ.30 ஆயிரத்தை எட்டி விடும்’’ என்றனர்.
சென்னை சந்தையில் வெள்ளி விலை கிராம் விலை ரூ.49.20 ஆக உள்ளது.