திமுக இளைஞரணியில் உறுப்பினர்களாக இருக்க 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி 35 ஆக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக இளைஞரணியின் தலைவர் பொறுப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இளைஞரணியின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய கல்வி வரைவு கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.இளைஞர் அணியில் சுமார் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணியில் சேர18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதை 35 ஆக உயர்த்துவது, மாவட்டம் தோறும் பயிற்சி பட்டறை நடத்துவது, 3 மாதத்திற்கு ஒரு முறை மண்டல வாரியாக இளைஞரணி மாநாடு நடத்துவது என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் நீர்நிலைகளை தூர்வாறுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட சுற்றுசுழல் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்குவது என்பது குறித்தும் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.