நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி பண்டிகை இன்று(செப்.2) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இந்து பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒன்று விநாயகர் சதூர்த்தியும் ஒன்று. இதையொட்டி, பல்வேறு வகையான பிள்ளையார் சிலைகள் அமைத்து மக்கள் வழிபடுவார்கள். நாடு முழுவதும் பிள்ளையார் கோயில்களில் காலை முதல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் விதவிதமான சிலைகளை அமைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தி.நகரில் 12 அடி உயரத்தில் அத்திவிநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
கோயம்பேடு மொத்த சந்தையில் துவங்கி அனைத்து சந்தைகளிலும் களிமண் பிள்ளையார் சிலைகள், பழங்கள், அவல், பொரிகடலை, குடை மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களைகட்டியிருக்கிறது.
தமிழகத்தில் கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக சமீபத்தில் உளவுத்துறை தகவல்கள் வந்ததாலும், ரெட் அலர்ட் விடப்பட்டதாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு ஈச்சனாரி விநாயகர் கோயில், மருதமலை உள்ளிட்ட கோயில்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காரைக்குடியை அடுத்த பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலில் மிகப்பெரிய கொழுக்கட்டை படைத்து வணங்கினர். இதே போல், பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து வழிபட்டு வருகின்றனர்.