சென்னையில் அதிமுக பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ(23). கம்ப்யூட்டர் இன்ஜினீயரான சுபஸ்ரீ, கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலையில் வேலை முடிந்ததும் அவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவுக்கு வரும் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையின் இருபுறங்களிலும் பெரிய பேனர்களை வைத்திருந்தனர்.
அந்த சாலையில் சுபஸ்ரீ சென்று கொண்டிருந்த போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த . பேனர் திடீரென சரிந்து அவர் மீது விழுந்தது. அவர் வண்டியுடன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது வேகமாக வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக, சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து விசாரிக்க வேண்டுமென்று நீதிபதிகளிடம் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்று விசாரணை நடத்திய நீதிபதிகள் கூறுகையில், தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், விதிமுறைகளை மீறி பேனர்கள் வைப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. அனைத்து அரசியல்கட்சிகளும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி வருகின்றன. இப்படி பேனர் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அதிகாரிகளின் மெத்தனமே முக்கிய காரணம். சென்னையில் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும் என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதிபதிகளின் உத்தரவுப்படி, பள்ளிக்கரணை காவல்துறை துணை ஆணையர் பிரபாகர், உதவி ஆணையர் சவுரிநாதன், மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் நேற்று மாலையில் ஐகோர்ட்டில் ஆஜராகினர். அவர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்ற போது எத்தனை பேனர் இருந்தது? டிஜிட்டல் பேனருக்கு என்.ஓ.சி. வாங்க வேண்டும் என்பது தெரியுமா? பிற்பகல் 2.30 மணிக்கு விபத்து நடந்திருக்கிறது, ஏன் இரவு வரை எப்ஐஆர் போடுவதற்கு தாமதமானது? பேனரில் உள்ள கட்சி கலர் தடுத்ததா? என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பினர், பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். அதை பேனர் வைத்தவர்களிடமும், அதிகாரிகளிடமும் வசூலிக்க வேண்டும்.
விதிமீறல் தொடர்பான உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தலைமைச் செயலாளர் கண்காணிக்க வேண்டும். மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.