விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Sep 24, 2019, 14:29 PM IST

இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளில் அடுத்த மாதம் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றே தொடங்கி விட்டது.வரும் 30-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இந்த இரு தொகுதிகளில், திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரசும் களம் காண உள்ளன. அதிமுக கூட்டணியில் இரு தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்ய திமுக, அதிமுக தரப்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அதிமுக தரப்பில் நேற்றே நேர்காணலும் நடத்தப்பட்டு, வேட்பாளர் அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு செய்தவர்களிடம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர் இன்று காலை நேர்காணல் நடத்தினர். மொத்தம் 22 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி போட்டியிட வேண்டும் என கள்ளக்குறிச்சி எம்.பி.யும், முன்னாள் அமைச்சர் க.பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி மனு கொடுத்திருந்தார்.

இநிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று நேர்காணலில் பங்கேற்கவில்லை. விருப்பமனு செய்த 22 பேரில், 12 பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி போட்டியிடுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

66 வயதான நா.புகழேந்தி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளராக உள்ளார். இதற்கு முன் விக்கிரவாண்டி ஒன்றிய திமுக செயலாளராக நா.புகழேந்தி தொடர்ந்து 3 முறை பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Leave a reply