தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தண்ணீருக்காக மக்கள் வாடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இந்த நிலைமை மேலும் மோசமாகி உள்ளது. சென்னைக்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் புழல் ஏரி முற்றிலுமாக வரண்டு போன புகைப்படங்கள் மக்களை நிலைகுலைய செய்தது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது, தமிழகம் மற்றும் புதுவைக்கு மழை பெய்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் போன்ற வறட்சி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதனால், மக்கள் மிகப்பெரிய வறட்சி பாதிப்பில் சிக்காமல் தப்பித்துள்ளனர். இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பதினைந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும், நாளை மதுரை, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.