விஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? பொன்முடி ஆவேசம்

Ponmudi reacts to minister c.v.shunmugam comments

by எஸ். எம். கணபதி, Oct 4, 2019, 14:38 PM IST

சட்டமன்றத்திலேயே விஜயகாந்தை கொச்சைப்படுத்தி, ஜெயலலிதா பேசியதை அமைச்சர் சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? என்று பொன்முடி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், விக்கிரவாண்டி தொகுதி திமுக பொறுப்பாளருமான பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும் போது, நிதானம் தவறி, விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் எங்கள் தலைவர் அடையாளம் தெரியாமல் போயிருப்பார் என்று அநாகரிகமாகப் பேசியுள்ளார். அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் கட்சியில் உள்ள ஒரு தொண்டனைக் கூட அடையாளம் தெரியாமல் போக வைப்பதற்கு எந்தக் கொம்பனும் தமிழகத்தில் பிறக்கவில்லை.

ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத கட்சி தே.மு.தி.க, எங்களால்தான் விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காமல் இருந்தால் 2011-ல் விஜயகாந்த் காணாமல் போயிருப்பார் என்றெல்லாம் விமர்சித்தவர்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான்.
2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு வர முடியாது என்று மறுத்து கோயம்பேட்டில் இருந்த விஜயகாந்தை தூதுவர்களை அனுப்பி, கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வந்து கூட்டணி வைத்தது அ.தி.மு.க.தான்.

இவ்வளவும் செய்து வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு வந்தவுடன். விஜயகாந்தை வசைபாடி, அவர்களின் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் நீக்கி, விஜயகாந்தை அசிங்கமான சைகைகள் மூலம் கேவலப்படுத்தியவர்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்தான்.
அப்போது முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெயலலிதா, “தகுதி இல்லாதவர்களுக்கு பதவி வந்து விட்டால். அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு விஜயகாந்த். தே.மு.தி.க. கூட்டணியில் எனக்கு சிறிதும் விருப்பம் இல்லை. அக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததற்காக வருத்தப்படுகிறேன்.

வெட்கப்படுகிறேன்” என்று சட்டமன்றத்திலேயே பேசி விஜயகாந்தை கொச்சைப்படுத்தியதை அமைச்சர் சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? சி.வி.சண்முகம் நாவடக்கத்துடன் பேச வேண்டும்.

எங்கள் தலைவர் மீது பாய்ந்து பிராண்ட நினைத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும், அடுத்து வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகும் அமைச்சர் பதவி என்ற அகங்காரம் அடையாளம் தெரியாமல் போய் விடும் என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே செயல்வீரர்கள் கூட்டத்தில், இந்த தேர்தல்தான் நமக்குக் கடைசி தேர்தல்” என்ற உண்மையை அமைச்சர் சி.வி.சண்முகம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு நன்றி. கடந்த இரு வருடங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சில நாட்கள் மிரட்டி பல நாட்கள் பாராட்டியும் அடிக்கும் கொள்ளைகளுக்கு “தேதி குறிக்கப்பட்டு விட்டதே” என்ற எரிச்சலில் எங்கள் தலைவரைப் பார்த்து பேசுவோரை தி.மு.க. தொண்டர்கள் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை சி.வி. சண்முகம் உணர வேண்டும்.

இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.

You'r reading விஜயகாந்த்தை கொச்சைப்படுத்தியதை சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? பொன்முடி ஆவேசம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை