மோடி - ஜின்பிங்க் வரலாற்று சந்திப்பு.. மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தயார்..

Mamallapuram readying for Modi-Xi meet

by எஸ். எம். கணபதி, Oct 9, 2019, 10:18 AM IST

சீனப்பிரதமர் ஷி ஜின்பிங்க் வரும் 11ம் தேதி சென்னைக்கு வருகிறார். அவரும் பிரதமர் நரேந்திரமோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த வரலாற்று சந்திப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது.

வழக்கமாக, இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு அதிபர்கள், பிரதமர்கள் டெல்லியில்தான் பிரதமரை சந்தித்து பேசுவார்கள். ஆனால், பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு, அவர்களை வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களில் சந்திக்கிறார்.

இந்த வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்க் வரும் 11ம் தேதி பிற்பகலில் சென்னை வருகிறார். விமான நிலையத்திலேயே அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர், மறுநாள் மாமல்லபுரத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது.

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் பல்வேறு இடங்களை பார்வையிடுகிறார்கள். அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிட்டு, நடந்து சென்றபடியே உரையாடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு புல்வெளி அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிரதமரும், சீன அதிபரும் சந்திக்கும் நிகழ்ச்சி முடிந்த பின்பே மீண்டும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். சீன அதிபருடன் அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சுமார் 150 பேர் வரலாம் எனத் தெரிகிறது. இவர்கள் அனைவரும் சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில்தான் தங்குகிறார்கள்.

சோழா ஓட்டலில் இருந்து 12ம் தேதி காலை, சீன அதிபர் ஜின்பிங்க் காரிலேயே மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு காரிலேயே சென்னை திரும்பும் அவர் அன்று மாலையிலேயே சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
இதையொட்டி, விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருவதால் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 3 ஆயிரம் போலீசார் மாமல்லபுரத்திற்கு அழைத்து வரப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள், செடி, கொடிகள் கொண்டு, பழைய சிற்ப கலைக்கல்லூரி சாலையில் சுற்றுலாத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மரகதப்பூங்கா அழகு படுத்தப்பட்டு வருகின்றன.

வெண்ணெய் உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் போன்ற புராதன மையங்களில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஜொலிக்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் அந்த சிற்பங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

You'r reading மோடி - ஜின்பிங்க் வரலாற்று சந்திப்பு.. மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தயார்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை