ஜெயகோபால் ஜாமீன் மனு.. ஐகோர்ட் இன்று விசாரணை

Admk Ex.councilor JayaGopal bail application comes in high court today

by எஸ். எம். கணபதி, Oct 10, 2019, 10:28 AM IST

பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மகன் திருமண விழாவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களை வரவேற்பதற்காக ரேடியல் சாலையில் வரிசையாக பேனர்களை வைத்திருந்தனர். சாலையின் நடுவில் வைத்திருந்த பேனர் ஒன்று சரிந்து விழுந்து, அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியில் அவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அனுமதியின்றி பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், அவரிடம் விசாரணை நடத்தவோ, கைது செய்யவோ இல்லை. இதையடுத்து, சட்டவிரோதமாக பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இத்தனை நாளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.

இதனிடையே, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தண்ணீர் லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்து, இந்திய குற்றவியல் சட்டப்பிரிவுகள் 279, 336, 304(ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான ஜெயகோபாலை கிருஷ்ணகிரி அருகே தேன்கனிக்கோட்டையில் போலீசார் கடந்த செப்.27ம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து, ஜெயகோபாலை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதன்பின், ஜெயகோபாலன், இந்த வழக்கில் கைதான மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கேட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடியாயின.

இந்நிலையில், ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணை வருகிறது.

You'r reading ஜெயகோபால் ஜாமீன் மனு.. ஐகோர்ட் இன்று விசாரணை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை