இடைத்தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் இருந்தார். நேற்று அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். விக்கிரவாண்டியில் அவர் பேசும் போது, இந்த ஆட்சி இப்போது போய் விடும், 10 நாளில் போய் விடும் என்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டே இருந்தார்.
ஆனால், 2 ஆண்டு 8 மாத காலமாக சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். ஸ்டாலின் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றார்.
இந்நிலையில், இன்று(அக்.13) நாங்குநேரி தொகுதிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரெட்டியார்பட்டியில் பிரச்சாரம் செய்தார். அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு வாக்கு கேட்டு எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
மக்களுக்கு நன்மை செய்வதற்காக இல்லாமல், பதவிக்கு ஆசைப்பட்டு இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகியுள்ளார். வசந்தகுமாரின் பேராசையால் நாங்குநேரியில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. எங்கள் வேட்பாளர் நாராயணனை நீங்கள் எளிதாக அணுக முடியும். காங்கிரஸ் வேட்பாளர் கோடீஸ்வரர் என்பதால் அவரை நீங்கள் விரும்பிய நேரத்தில் சந்திக்க முடியாது.
யாரை தேர்ந்தெடுத்தால் நன்மை கிடைக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இடைத்தேர்தல் வரும் போது தான் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு திண்ணை ஞாபகம் வருகிறது.
தாமிரபரணி, நம்பியாறு திட்டத்தைப் பற்றி ஸ்டாலின் இங்கு பேசியுள்ளார். அவர்கள் ஆட்சியில் இருந்த போது வெறும் திட்டத்தை மட்டும் அறிவித்து விட்டு போய் விட்டார்கள். திட்டத்தை அறிவித்தால் போதுமா? ஒரு திட்டத்தை அறிவித்தால் அதற்கான நிலத்தை கையகப்படுத்த வேண்டாமா? நாங்கள் வந்த பிறகுதான், தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகளிடம் பேசி, நிலத்தை கையகப்படுத்தினோம். இந்த திட்டத்தை 4 பகுதிகளாக பிரித்து அதில் 2 பகுதிகளில் வேலைகள் முடியப் போகின்றன. இந்த நதிகள் இணைப்பு திட்டத்தை 2020ம் ஆண்டுக்குள் முடித்து கால்வாயில் தண்ணீர் வரச் செய்வோம்.
இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.