முரசொலி இடம் பஞ்சமி நிலமா? ஸ்டாலின் - ராமதாஸ் மோதல்..

murasoli office is situated in panchami land, Dr.Ramadoss accussed again

by எஸ். எம். கணபதி, Oct 19, 2019, 13:21 PM IST

திமுக பத்திரிகையான முரசொலியின் அலுவலகம் இருப்பது பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று டாக்டர் ராமதாசுக்கு ஸ்டாலின் சவால் விட்டார். தற்போது டாக்டர் ராமதாஸ் அதற்கும் பதில் கொடுத்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தோ்தல் வரும் 21ம்தேதி நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் 90 ஆயிரம் வன்னியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக உள்ளதால், வன்னியர்களின் பெரும்பாலான வாக்குகள் அதிமுகவுக்கு போய் விடும் என்று திமுக பயந்தது. அதனால், திமுக தலைவர் ஸ்டாலின் சில வாக்குறுதிகளை கொடுத்தார். திமுக ஆட்சிக்கு வந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும். மறைந்த முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று வாக்குறுதிகள் கொடுத்தாா்.

இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதியில் ஏ.கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத்துக்கு சீட் கொடுக்காமல், இப்போது தோ்தலுக்காக மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறாா் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமா்சித்தார்.

இதன்பின்பு, நாங்குநேரி பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி தியேட்டரில் அசுரன் படம் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் வெற்றிமாறனுக்கும், நடிகா் தனுஷுக்கும் போனில் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல, பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல, பாடம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஆஹா... அற்புதம். அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவா்களிடம் மீண்டும் ஒப்படைப்பாா் என்று நம்புவோம் என்று பதிவிட்டார்.

இதையடுத்து, ஸ்டாலின் தற்போது முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பரம்பரை பரம்பரையாக பட்டா நிலமாக வைத்திருந்தவர்களிடம் வாங்கிய நிலம் என்று பதில் கொடுத்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விட்டார்.

இதற்குப் பின்பும், இவர்களின் மோதல் முடிவடையவில்லை. டாக்டர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

1. முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

2. முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

3. முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்கு சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

4. நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில்தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை!
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு ஸ்டாலின் என்ன விளக்கம் தரப் போகிறாரோ?

You'r reading முரசொலி இடம் பஞ்சமி நிலமா? ஸ்டாலின் - ராமதாஸ் மோதல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை