தமிழகத்தை ஆளுகிற தகுதி பாமகவுக்கு மட்டுமே உள்ளது என, நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கூறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவின் பொதுக்கூட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாமக சார்பில் நடந்த இந்த பொதுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். குறிப்பாக வரும் டிசம்பரில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வரும் என்று சொல்கிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்தை ஆளுகிற தகுதி பாமகவுக்கு மட்டுமே உள்ளது. இதை நான் சொல்லவில்லை. ஒரு பேட்டியில், நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் கூறியுள்ளார். எதிர்வரும் தேர்தலில் கமலும், இன்னொரு நடிகரும் சேர்ந்து போட்டியிட்டாலும் 10 சதவீதம் ஓட்டுகள்தான் வாங்குவார்கள். ஆனால், பாமக 50 சதவீத ஓட்டுகள் வாங்கும்.
கும்மிடிப்பூண்டி ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டி, சிங்கப்பூர் போல் உள்ளது. ஆனால், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாக வெளியேறுகின்றன. பாமக ஆட்சிக்கு வந்தால், ஸ்ரீசிட்டி போல் ஒரு சிங்கப்பூரை கும்மிடிப்பூண்டியில் உருவாக்குவோம்” என்றார்.