தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல, அவர் நாட்டின் பிரதமர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாலேயே அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். தற்போதுள்ள சூழலில் கட்சியை காப்பாற்ற நீங்கள் இணைய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்” என்று தெரிவித்து இருந்தார். இது விவாதத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், சிவகாசியில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “ரஜினி, கமல் கட்சி ஆரம்பிப்பதால் அதிமுகவிற்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பில்லை. கமல்ஹாசன் யாரை எதிர்த்து அரசியலில் ஈடுபடுகிறார் என்பதே தெரியவில்லை. அவர் வந்த வேகத்தில் அதை விட்டு விட்டு திரும்ப ஓடிவிடுவார்.
ஏற்கெனவே விஷ்வரூபம் பட விவகாரத்தில் நாட்டை விட்டு ஓடுவேன் என்றார். ரஜினி ஒரு நல்ல மனிதர். அவர் அரசியலில் ஈடுபடுவதை விட எப்பொழுதும் போல் சினிமாவில் நடிப்பதே அவருக்கு நல்லது. அரசியலில் இறங்கி அவரது பெயரை கெடுக்க வேண்டாம். கமலஹாசன் பெயரை கெடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
தமிழக அரசுக்கு மோடி ஆலோசனை சொல்கிறார் என்கிறார்கள். தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல. நாட்டின் பிரதமர். அதனால் அவர் ஆலோசனை சொல்கிறார்” என தெரிவித்துள்ளார்.