மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 22-ஆவது மாநாடு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது இந்த மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “இந்திய அரசியலில் மாற்றுக் கொள்கைகள் அடிப்படையிலான-மக்களுக்கான மாற்றை முன்நிறுத்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை இலக்காக இருக்கிறது என்றும், அத்தகைய மாற்று என்பது இடது-ஜனநாயக முன்னணி என்ற அடிப்படையிலேயே இருக்க முடியும்” என்றும் கூறினார்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியார்களிடம் பேசிய யெச்சூரி, “மோடி அரசு, மிக மோசமான வடிவமாக இருக்கிறது. லலித்மோடி, விஜய் மல்லையா, நீரவ் மோடி என அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்திருக்கிற கார்ப்பரேட் கனவான்களுக்கு மோடி அரசு பாதுகாப்பு அளித்துள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.
அத்துடன், “வராக்கடன்களைத் திரும்ப வசூலிக்க வேண்டும், வசூலிக்க முடியாதவர்களின் பிற சொத்துக்களை அரசு கையகப்படுத்தி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், “ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்திலும் மிகப்பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், உண்மைகளை நாட்டிற்குச் சொல்ல வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.