அதிமுக ஆட்சியே சரியில்லை என்கின்றேன். பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன் என நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் வருகின்ற 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து “நாளை நமதே” என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர். ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார் என்றும் கொடி, சின்னத்தையும், தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார் என்று தெரிகிறது.
இந்நிலையில், மூத்த தலைவர்களைச் சந்தித்து கமல் ஆலோசனை நடத்திவருகிறார். அதன் தொடர்ச்சியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், ரஜினிக்காந்த் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசன் இருவரும் சந்தித்து உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசனிடம் அதிமுக தலைவர்களை சந்திக்காதது ஏன் என கேட்டபோது, “அதிமுக ஆட்சியே சரியில்லை என்கின்றேன். பிறகு எப்படி அவர்களை சந்திப்பேன்” என்றார். மேலும், என்னுடைய கொள்கைகள் என்ன என்பது சீமானுக்கு தெரியாத நிலையில், இப்போது ஆதரவு பற்றி கேட்பது சரியாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.