கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீட்டின் சாவியை ரஜினி இன்று வழங்கினார்.
ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்பிறகு, ரஜினி மக்கள் மன்றம் வேக,வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படத் தொடங்கியது. சென்னையில் குடிநீர் பற்றாக்குறை நிலவிய போது ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் லாரிகள் மூலம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இதே போல், பல ஊர்களில் ரஜினி மக்கள் மன்றத்தினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட மக்களில் 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் இலவசமாக வீடு கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது 10 வீடுகள் தலா ரூ.1.85 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இன்று(அக்.21) காலையில் வீடுகள் பெறும் பயனாளிகளை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு ரஜினி அழைத்திருந்தார். அவர்களை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அழைத்து வந்தனர். அவர்களிடம் இலவச வீட்டிற்கான சாவிகளை ரஜினி வழங்கினார். பின்னர், அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். வீடு பெற்றவர்கள் ரஜினிக்கு தங்கள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.