விக்கிரவாண்டி தொகுதியில் 13வது சுற்று முடிவில் அதிமுக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் 2வது சுற்று முடிவில் அதிமுக 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபைத் தொகுதிகளில் கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இரு தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது.
விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும், நாம் தமிழர் சார்பில் கந்தசாமியும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றிலேயே அதிமுக 2 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் இது 4 ஆயிரம், 6 ஆயிரம், 8 ஆயிரம் என்று அதிகரித்தது. 13வது சுற்று முடிவில் அதிமுக 74,867 வாக்குகளும், திமுக 46,283 வாக்குகளும், நாம் தமிழர் 1896 வாக்குகளும், நோட்டாவில் 1149 வாக்குகளும் விழுந்திருந்தது.
நாங்குனேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கவில்லை. வாக்குப் பெட்டிகள் கொண்டு வருவதிலேயே தாமதம் ஏற்பட்டது. இதனால், வாக்க எண்ணிக்கை தொடங்குவதற்கு தாமதமானது. மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக வாக்குகள் எண்ணும் பணி பாதிக்கப்பட்டது.
கடைசியாக, 2வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 9,327 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 6,353 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ்நாராயணன் 127 வாக்குகளும் பெற்றிருந்தனர்.