50 வருடங்களாக போன்சாய் மரமாக இருந்துவிட்டு, தற்போது ஆலவிருட்சமாக வளர்வேன் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் தான் தனிக்கட்சி தொடங்குவதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ள பொது கூட்டத்தில், நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், கமலின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “தலைப்புச் செய்தியாக கமலின் கட்சி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவரால் ஒருபோதும் தலைவராக முடியாது. 50 வருடங்களாக போன்சாய் மரமாக இருந்துவிட்டு, தற்போது ஆலவிருட்சமாக வளர்வேன் என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
நடிகர்கள் வந்துதான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. அனைத்து அரசியல் தலைவர்களும் களத்தில் இருக்கிறார்கள். திரைப்படப் போட்டியைப் போல சகோதரர் கமல், அவசர அவசரமாகக் கட்சியைத் தொடங்குகிறார்" என்று தெரிவித்துள்ளார்.