அயோத்தி நில வழக்கில் இம்மாதம் 17ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளதால், வரும் 10ம் தேதி முதல் காவலர்கள் உள்பட காவல் துறையினர் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்திற்கு இந்து அமைப்புகளும், முஸ்லிம் அமைப்புகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பாக அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் அரசியல் சாசன அமா்வு விசாரித்தது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான இந்த அமர்வு தொடர்ச்சியாக 40 நாட்களுக்கும் மேலாக வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் இம்மாதம் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அதற்கு முன்பாக அவர் விசாரித்த வழக்குகளில் தீர்ப்புகளை கூற வேண்டும். எனவே, அடுத்த வாரத்தில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
வழக்கில் இருதரப்பினரும் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்துள்ளனர். எனவே, தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதற்கேற்ப பதற்றம் ஏற்படலாம் என ஒருவித அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை யாரும் வரும் 10ம் தேதிக்கு பிறகு, மறு உத்தரவு வெளியாகும் நாள் வரை விடுப்பு எடுக்கக் கூடாது என்று டி.ஜி.பி. திரிபாதி தடையுத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் அனைத்து அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காவல் துறையினர் அனைவருமே சட்டம்ஒழுங்கை பராமரிக்கும் பணிக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடுவது போல் தேவையான இடங்களுக்கு செல்லத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.