காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை அர்ச்சகர்களுக்கும், தென்கலை அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வடகலை பிரிவு அர்ச்சகர்களுக்கும், தென்கலை பிரிவு அர்ச்சகர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ேம மாதம் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது. அதில், முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை மே 29-ம் தேதி நடைபெற்றது. அதற்கு முதல் நாளன்று, நம்மாழ்வார் சந்நிதியில் வரதராஜ பெருமாளை எழுந்தருளச் செய்து தென்கலை அர்ச்சகர்கள் நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாசுரங்களை பாடினர். அப்போது, மறுநாள் அதிகாலையில் கருடசேவை நிகழ்ச்சிக்குப் பெருமாளை அலங்காரம் செய்ய வேண்டும்' என்று கூறி வடகலை அர்ச்சகர்கள் பெருமாளை எடுத்துச் சென்றார்கள். இதையடுத்து, இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின், அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்தனர்.
இந்நிலையில், இன்றும் வரதராஜ பெருமாள் கோயிலில் பாசுரங்கள் பாடுவதில் வடகலை பிரிவினருக்கும், தென்கலை பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின், அறநிலையத் துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் வந்து இருதரப்பினரையும் விலக்கி, சமரசம் செய்து வைத்தனர்.
வைணவர்களில் வடகலை பிரிவினர், வட இந்தியாவில் உள்ளது போல் பெருமாளையும், லட்சுமிதேவியையும் ஒருசேர வணங்குவார்கள். அதே சமயம், தென்கலைப் பிரிவினர் பெருமாளுக்கு முக்கியத்துவம் அளித்து வணங்குவார்கள்.