நான் காவியிடம் மாட்டிக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி வாயைத் திறந்தாலே அது பரபரப்புதான். அதிலும் அரசியல் பற்றி அவ்வப்போது அவர் முரண்பாடாக பேசுவது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், இன்று அவர் பேசியிருப்பது இன்னொரு அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மறைந்த இயக்குனர் பாலச்சந்தரின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய ரஜினிகாந்த், அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி எனக்கு எந்த அழைப்பையும் விடுக்கவில்லை. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பம். திருவள்ளுவர் போன்ற ஞானிகள், மதம் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். திருவள்ளுவருக்கு காவி அணிவித்தது குறித்த விவாதம் தேவையற்றது.
உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் போட்டியிடப் போவதில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் என்னை சந்திப்பதில் அரசியல் எதுவும் இல்லை.
என் மீது காவி சாயம் பூச முயற்சி செய்யப்படுகிறது. நானும் சரி, திருவள்ளுவரும் சரி, அதில் மாட்டிக் கொள்ள மாட்டோம். மத்திய அரசு எனக்கு விருது அளிப்பதற்கு நன்றி என்று சிரித்து கொண்டே பதிலளித்தார் ரஜினி.
இதன்மூலம், பாஜகவுக்கு ரஜினி, கோ பேக் சொல்லி விட்டாரோ என்று தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.