தனது கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் சின்னம் குறித்து மதுரை பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
நேற்று அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தை தொடர்ந்து, மீனவர்களுடன் சந்திப்பு, பரமக்குடியில் பொதுகூட்டம் என தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த நடிகர் கமல்ஹாசன் மாலை மதுரையில் நடைபெற்றத்தில் தனது கட்சிக் கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை வெளியிட்டார்.
கட்சியின் சின்னத்தில் சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறத்தில் ஆறு இணைந்த கைகள் இடம் பெற்றிருந்தது. நடுவில் கருப்பின் மையத்தில் வெள்ளை நிற நட்சத்திர குறியீடும் இருந்தது.
அப்போது பேசிய அவர், “இதில் உள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள 6 மாநிலங்களைக் [தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி] குறிக்கும். இதை நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். அதேபோல், இதில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கும்'' என்றும் கமல் தெரிவித்தார்.