உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு டிச.2ம் தேதி வெளியிடப்படும்.. மாநில தேர்தல் ஆணையம் உறுதி

by எஸ். எம். கணபதி, Nov 18, 2019, 18:32 PM IST

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு(நோட்டிபிகேஷன்), டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் இது வரை நடைபெறவில்லை. அந்த ஆண்டில் அறிவிப்பு வெளியான போது, சென்னை மாநகராட்சி வார்டுகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று கூறி, திமுக சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு, தொகுதி மறுவரையறை உள்பட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு மாநில தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்தாமல் தள்ளி வந்தன.

என்னென்னமோ காரணங்களை சொல்லி வந்த மாநில தேர்தல் ஆணையம், கடைசியாக, கடந்த அக்டோபரில் 4 வார அவகாசம் கேட்டது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று (நவ.18) உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் பி.எஸ்.நரசிம்மன், “உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது” என்று கேட்டார். அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி வாதாடுகையில், “தொகுதி வரையறையை இன்னமும் முடிக்கவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை இதுவரை செய்யப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்காக மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் வேண்டுமென்றே இப்படி செயல்படுகின்றன” என்றார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வக்கீல், “உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி தேர்தல் அறிவிப்பு ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதை ஏற்ற தேர்தல் ஆணைய வக்கீல், டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று உறுதியளித்தார். இதன்படி, டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும்.

எனினும், அதிமுகவுக்கு ஆதரவான குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் ஒரு இடஒதுக்கீடு பிரச்னையை கிளப்பியுள்ளார். அதாவது, துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு செய்யப்படாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்பதுதான். அதனால், உள்ளாட்சித் தேர்தலை டிசம்பரில் எதிர்கொள்ள அதிமுக அரசு விரும்பாவிட்டால், தள்ளிப் போடுவதற்கு மீண்டும் ஒரு காரணம் கிடைத்து விட்டது.

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள், 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு அரசியல்கட்சிகள் சார்பில் போட்டியிடலாம்.


Leave a reply