தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமனம்..

IAS officer Rajagopal appointed as Chief Information Commissioner.

Nov 18, 2019, 22:03 PM IST

தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டார்.

தமிழக தகவல் ஆணையர் பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. இந்த பதவியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநனர்களை அமர்த்தலாம். ஆனால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் ஆட்சியில், தங்களுக்கு சாதகமாக செயல்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஓய்வுக்கு பிறகு கொடுக்கப்படும் பரிசாக இந்த பதவியை வழங்கி வருகின்றன.

இந்த வரிசையில், காலியாக உள்ள தலைமை தகவல் ஆணையர் பதவியை நிரப்புவதற்கான தேர்வு கமிட்டி கூட்டம் இன்று(நவ.18) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கமிட்டியில் முதலமைச்சர், பணியாளர் நலன் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள். மெஜாரிட்டி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்பதால், முதலமைச்சரும், அமைச்சரும் தேர்வு செய்பவரே நியமிக்கப்படுவார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த தேர்வு கமிட்டிக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழக பணியாளர் நலன் துறை செயலாளர் ஸ்வர்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு எத்தனை பேர் விண்ணப்பித்தார்கள்? அவர்களின் பயோ டேட்டா விவரங்கள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் கடிதத்துடன் இணைக்கப்படவில்லை. எனவே, தேடுதல் குழுவின் பரிந்துரையினை ஆழ்ந்து பரிசீலனை செய்து, தெரிவுக்குழு உறுப்பினர் என்ற முறையில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டும் பதவியில் அமரும் ஒரு மாநில தலைமை தகவல் ஆணையரைத் தேர்வு செய்யும் இந்த நடைமுறை எவ்விதத்திலும் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பது மட்டுமின்றி - தமிழக அரசில் பரந்து விரிந்து கிடக்கும் ஊழல் தொடர்பான முக்கிய விவரங்களை மூடி மறைப்பதற்கான முயற்சியில் அரசு துவக்கத்திலேயே ஈடுபடுகிறது என்று எண்ணுகிறேன். அதனால் கூட்டத்தில் நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என்று கூறி புறக்கணித்து விட்டார். பிறகென்ன? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், பணியாளர் நலன் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் ஆலோசித்து தலைமை தகவல் ஆணையராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபாலை தேர்வு செய்தனர்.

கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ராஜகோபால் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பணியாற்றி வந்தார். வழக்கமாக, கவர்னரின் செயலாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பார்கள். ஆனால், ராஜகோபால் இன்னொரு கவர்னர் போல் அதிகாரிகளை அழைத்து கூட்டங்களையே நடத்தினார். அவருடைய செல்வாக்கு அப்போதே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு(வெளிப்படையாக அல்ல) வந்தது. இப்போது ஆட்சியில் அவருக்கு உள்ள செல்வாக்கு தற்போது வெளிப்பட்டுள்ளது. கவர்னரின் புதிய செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

You'r reading தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை