காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் நேற்று(நவ.18) சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை என்று மழுப்பினார்.
மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டது. பாஜக அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து கூட்டணி முறிந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முயற்சித்தது. என்.சி.பி 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் பிடித்துள்ளன. ஆக, மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தால் மெஜாரிட்டி ஆட்சி அமைக்கலாம். ஆனால், சிவசேனாவின் இந்துத்துவா கொள்கையை எதிர்த்து மதசார்பற்ற கொள்கையுடைய காங்கிரஸ் அதனுடன் கூட்டணி சேர தயக்கம் காட்டி வருகிறது.
மேலும், சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தால், கர்நாடகாவைப் போல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுத்து ஆட்சியை கவிழ்த்து விடும். அதன்பிறகு, சிவசேனாவும் பாஜக பக்கமே போய் விடும் என்று காங்கிரஸ் பயப்படுகிறது. ஆனாலும், பாஜகவை பழிவாங்குவதற்காக சிவசேனா தொடர்ந்து என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று(நவ.18) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். அதன்பிறகு அவர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த போது, சோனியா மற்றும் ஏ.கே.அந்தோணியை சந்தித்து மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்து பேசினேன். ஆட்சி அமைப்பது பற்றி எதுவும் பேசவில்லை என்றார்.
சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி பேசவில்லையா? சிவசேனா தொடர்ந்து உங்களுடன் கூட்டணி ஆட்சி அமைப்பதாக சொல்லி வருகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், பாஜகவுடன் சிவசேனாவும் சேர்ந்துதான் தேர்தலில் போட்டியிட்டன. எனவே, அவர்களிடம் போய் ஏன் ஆட்சியமைக்கவில்லை என்று கேளுங்கள் என்றார். தொடர்ந்து அவர் எந்த பிடியும் கொடுக்காமல் மழுப்பலாக பதிலளித்தார்.
இதன்பின்னர், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வந்து சரத்பவாரை சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பின் ராவத் கூறுகையில், விரைவில் ஆட்சியமைப்போம் என்று வழக்கம் போல் கூறிவிட்டு சென்றார்.