முதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா? ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி கேள்வி..

SC/ST commission cannot enquire about Panchami land, Dmk said

by எஸ். எம். கணபதி, Nov 20, 2019, 09:13 AM IST

பிரதமர் வீடு அல்லது முதலமைச்சர் வீடு பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் விசாரணை நடத்துவீர்களா என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையரிடம் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று குற்றம்சாட்டி பாஜக பிரமுகர் சீனிவாசன், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து, தமிழக தலைமை செயலாளருக்கும், முரசொலி அறக்கட்டளைக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. நேற்று(நவ.19), தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜரானார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் கொடுத்த சீனிவாசன் என்பவர், கால அவகாசம் கேட்டிருக்கிறார். தலைமைச் செயலாளரும் கால அவகாசம் வேண்டுமென கேட்டிக்கிறார். அவர்கள் வாய்தா வாங்குவது எதை காட்டுகிறது?

எங்கள் மீது என்ன குற்றச்சாட்டு இருக்கிறது என்ற புகாரைக் கூட சீனிவாசனால் கொடுக்க முடியவில்லை. நான் அப்போது ஆணையரைப் பார்த்து, “வழியில் போகிற யார் புகார் கொடுத்தால் நீங்கள் விசாரித்து விடுவீர்களா? நான் கூட இப்போது பிரதமர் வாழ்கிற வீடு பஞ்சமி நிலத்திலே இருக்கிறது என்று சொல்வேன். நீங்கள் விசாரிப்பீர்களா? முதலமைச்சர் வசிக்கிற இடம் பஞ்சமி நிலம் என்று சொன்னால் நீங்கள் விசாரிப்பீர்களா?” என்று கேட்டேன். “தமிழக பாஜக தலைமை அலுவலகம் இருக்கிற கமலாலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்றால் அதை நீங்கள் விசாரிப்பீர்களா?” என்று எங்கள் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேட்டார். அதற்கு அவரால் முறையாக எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.

மேலும் “பஞ்சமி நிலம் குறித்து விசாரிக்கிற அதிகாரமே உங்களுக்கு இல்லை. நாங்கள் எல்லாவிதமான ஆதாரங்களோடும் வந்திருக்கிறோம். எங்கள் மீது சீனிவாசன் புகார் சொன்னார். அவர் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார் என்று கேட்டால் பதில் இல்லை. மேலும், இதை விசாரிக்கிற அதிகாரமே உங்களுக்கு இல்லை என்று பல தீர்ப்புகளை கொடுத்திருக்கிறோம். எனவே,இந்த வழக்கு முடிந்துவிட்டதாக நான் கருதுகிறேன்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

You'r reading முதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா? ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை