அடுத்த மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்பதற்கான சிக்னல்கள் தெரியத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு, வார்டுகள் மறுவரையறை என்று பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பவில்லை. ஆளும் அதிமுக இந்த தேர்தலை சந்திக்க பயப்படுவதால், எதையாவது காரணம் சொல்லி தள்ளிப் போட்டு வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
கடைசியாக, கடந்த 2 நாட்களுக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது, டிசம்பர் 13ம் தேதிக்குள் தேர்தல் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், மாநில தேர்தல் ஆணையம் ஏதேனும் காரணம் சொல்லி மீண்டும் அவகாசம் கேட்குமோ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது.
ஆனால், தற்போது அதிமுக அரசு வரிசையாக சலுகைகளை அறிவித்து வருவதால், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அக்கட்சியும் தயாராகி வருவது தெரிகிறது. சர்க்கரை மட்டுமே பெறக் கூடிய ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனிமேல் அரிசியும் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சர்க்கரை மட்டும் பெற்று வந்த 10 லட்சத்து 19,491 ரேஷன்கார்டுகளை அரிசி கார்டுகளாக ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.
அதே போல், சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து சொத்து வரியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. சொந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், பிறவகை கட்டிடங்களுக்கு 100 சதவீதம் என்று சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.
தற்ேபாது, மக்கள்கோரிக்கையை ஏற்று சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மேலும், அரசு நிதித்துறை (செலவினங்கள்) முதன்மை செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகளின் இயக்குனர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, சொத்து வரி சீராய்வு மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதே போல், வெகுநாட்களாக தரப்படாமல் இருந்த முதியோர் உதவித் தொகைகளை உடனடியாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருக்கிறார். இப்படி உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்காளர்களை குறிவைத்து அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. எனவே, டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என நம்பலாம்.