சிதம்பரம் ஜாமீன் மனு.. அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

by எஸ். எம். கணபதி, Nov 20, 2019, 11:35 AM IST
Share Tweet Whatsapp

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விளக்கம் கேட்டு அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு விசாரணை வரும் 26ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த முதலீடு அனுமதி விவகாரத்தில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கத் துறையும் அவர்கள் மீது தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி பெஞ்ச், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தார். ஆனால், அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் தற்போது திகார் சிறையிலேயே தொடர்ந்து இருக்கிறார்.

இந்நிலையில், சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று(நவ.20) விசாரணைக்கு வந்தது. இம்மனு தொடர்பாக அமலாக்கத் துறையினர் வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்கக் கூறி, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.


Leave a reply