மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து.. மத்திய அரசு மீது ஸ்டாலின் புகார்...

Stalin asks central govt. to release white paper on Reservation in medical admission

by எஸ். எம். கணபதி, Nov 22, 2019, 14:37 PM IST

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில அரசும் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும், பொதுத் தொகுப்பிற்கு அளித்துள்ள மருத்துவ கல்வி இடங்களில் (எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி) அரசியல் சட்டப்படி ஒதுக்கப்பட வேண்டிய இடங்களை, ஏன் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ஒதுக்கவில்லை என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பிரதமரோ அல்லது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரோ உரிய பதிலளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

2017-18-ஆம் ஆண்டுகளில் பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட 9,966 மருத்துவ கல்வி சேர்க்கை இடங்களில், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு 2,689 எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி. மருத்துவ இடங்கள் மண்டல் கமிஷன் அடிப்படையிலான 27 சதவீத ஒதுக்கீட்டின்படி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அந்த வருடத்தில் மத்திய அரசு கல்லூரிகளில் கிடைத்ததோ, வெறும் 260 சீட்டுகள் மட்டும்தான்.

2018-19-ஆம் ஆண்டில் 12,595 மருத்துவ இடங்கள் பொதுத் தொகுப்பிற்கு அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 3,400 மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கப்பட்டதோ வெறும் 299 இடங்கள் மட்டும்தான்.

இரு வருடங்களிலும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 5,530 எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.டி. மருத்துவ இடங்கள், இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் புறக்கணித்து, பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பா.ஜ.க. ஆட்சி மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. இப்போது பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இடஒதுக்கீட்டை நிராகரிப்பது, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரைத் திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும்.

ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அமைச்சர்கள் எண்ணிக்கை அடியோடு குறைக்கப்பட்டு விட்டது. மத்திய அரசின் செயலகத்தில் உள்ள அரசு செயலாளர்கள் மட்டத்தில் அறவே இல்லை என்றதொரு நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு மூலம் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் மருத்துவக் கல்வியைப் பாழ்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது அரசியல் சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டு உரிமையையும் தட்டிப் பறிப்பது மாபெரும் - மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.

ஆகவே, பொதுத் தொகுப்பிற்கு ஒதுக்கப்படும் மருத்துவ இடங்களில் 2017-18, 2018-19-ஆம் ஆண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எத்தனை மருத்துவ இடங்கள் வழங்கப்பட்டன?

மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து இடஒதுக்கீடு விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கை ஒன்றை, நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே பிரதமர் நரேந்திர மோடி தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27 சதவீத இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்தக் கூட்டத்தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்பட்டோர் இடஒதுக்கீடு ரத்து.. மத்திய அரசு மீது ஸ்டாலின் புகார்... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை