தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது? முரளிதர் ராவ் பேட்டி

by எஸ். எம். கணபதி, Nov 30, 2019, 13:01 PM IST
Share Tweet Whatsapp

தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார்.

பாஜக கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்திற்கு வருகிறார். தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விட்டு, மாநில தலைவரை முடிவு செய்வார் என தெரிகிறது. பாஜகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்றாலும், மாநில தலைவர் பதவிக்கு கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியின்றி தேர்வு செய்வதே வழக்கம்.

இந்த முறை மாநில பாஜக தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு காரணம், மத்தியில் தொடர்ந்து பாஜக ஆட்சியில் நீடிப்பதாலும், தமிழகத்தில் அதற்்கு கட்டுப்பட்ட அரசாக அதிமுக அரசு இருப்பதும்தான். இதன்காரணமாக, மாநில தலைவருக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அதனால், நிர்வாகிகளிடம் கருத்தொற்றுமை ஏற்படுத்தி மாநில தலைவரை தேர்வு செய்ய முயற்சி நடக்கிறது.

இந்நிலையில், ஜே.பி.நட்டா வருகை குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் கூறியதாவது:

தமிழகம் எங்களுக்கு(பாஜக) மிக முக்கியமான மாநிலம் என்பதுடன், அரசியல் ரீதியாக சவாலான மாநிலம். எங்கள் கட்சியில் நிர்வாகிகளை தேர்தல் மூலமே தேர்வு செய்வோம். திமுக போல குடும்ப உறுப்பினர்களை நியமிக்க மாட்டோம். ஜே.பி. நட்டா பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னை வருகிறார். அவர் தமிழக நிர்வாகிகளுடன் பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல், கூட்டணி, தலைவர் தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாலோசிப்பார். தமிழக பாஜக தலைவர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும். 2 வாரத்தில் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஜனவாி மாதத்திற்கு பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு முரளிதர்ராவ் தெரிவித்தார்.


Leave a reply