ஸ்டாலின் அடுத்த முதல்வரா? பாஜக பிரமுகர் திடீர் பல்டி..

Bjp Arasakumar clarifies that he simply greeted Stalin in marriage function

by எஸ். எம். கணபதி, Dec 2, 2019, 13:32 PM IST

நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றுதான் பேசினேன் என்று பாஜக துணை தலைவர் அரசகுமார் திடீர் பல்டி அடித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று(டிச.1) திமுக பிரமுகர் பெரியண்ணன் இல்லத் திருமண விழா நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் கலந்து கொண்டு பேசும் போது, உள்ளாட்சிகளில் நல்லாட்சி கொடுத்து நாயகனாக வீற்றிருக்கும் என்றைக்கும் எங்களுக்கும் நிரந்த தலைவராக உள்ள அன்புத் தளபதியே... என்று ஸ்டாலினை புகழ்ந்தார்.

மேலும், எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் கட்டாயம் வரும் என பேசினார்.

இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும், அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பது பாஜகவினருக்கே தெரிந்து விட்டது என்று திமுகவினர் பேசினர். பாஜகவினரோ சமூக வலைதளங்களில் அரசகுமாரை திட்டி தீர்த்தனர்.
இதைத் தொடர்ந்து, பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் நேற்றிரவே அவசரமாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் நான் பேசியதை முழுமையாக வெளியிடாமல் ஒரு சில நிமிடங்கள் மட்டும் திரித்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

நான் யதார்த்தமான முறையில் ஜனநாயக முறையில் திமுக தலைவர் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறார் என்றேன். இதில் ஏதும் பாஜகவின் குரலாகவும் பாஜகவின் வார்த்தைகளால் நான் வெளியிடவில்லை.

பாஜகவின் துணைத் தலைவராக நான் இருக்கும் போது, எப்படி திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்லுவேன்?

திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது என்னை எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் அரசியலில் பயணிக்கிறோம்.
அந்த நாகரீகமான மரபின் அடிப்படையில் திருமண வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை அவருடைய எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் நடைபெறும். காத்திருங்கள் காரியம் நடக்கும் என்று நான் சொன்னதை திமுகவிற்கு ஆதரவாக பேசியதை போன்று ஊடகங்கள் பரபரப்பாக ஆக்கியிருக்கிறார்கள்.

பாஜக ஆட்சி கட்டில் அமர்த்தப்பட வேண்டும் என்றுதான் குறிப்பாக நான் உழைத்து கொண்டிருக்கிறேன் ஒரு கட்சியோடு நிர்வாகியாக இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்ல எனக்கு அவசியம் இல்லை.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே போன்று ஒரு திருமண நிகழ்வில் ஸ்டாலின் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறினேன் அதேபோன்று இந்த திருமணத்தில் இன்றும் அழகு குறையாமல் இருக்கிறீர்களே என்ற அடிப்படையில் எம்.ஜி.ஆர் ஒப்பிட்டு சொன்னேன்.

என்னைப் பொறுத்தவரையில் சாதாரணமாகத்தான் சொல்லப்பட்டது பாஜகவிற்க்கும் திமுகவிற்கும் கொள்கை ரீதியாக மாறுபட்ட சிந்தனை மாறுபட்ட கருத்து உண்டு.
ஜனநாயக முறையில் அவர் முதலமைச்சர் ஆவதில் வாழ்த்துக்கள் என்றுதான் கூறினேன் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

என்னுடைய வளர்ச்சி பிடிக்காதவர்கள் ஒரு சிலர் இதை திரித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடாமல் ஒரு சில நிமிடங்கள் மட்டும் திரித்து சமூக வலைதளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர்.

ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால் இதை பயன்படுத்தி அருவருக்கத்தக்க வகையில் சமூக வலைதளங்களில் பேசி இருக்கிறார்கள் இது போன்ற ஆட்களை அடையாளம் கண்டு நான் சும்மா விடுவதில்லை என்று எச்சரிக்கையாக கூறுகிறேன்.
என்னுடைய பேச்சு தொண்டர்களை காயப்படுத்தியிருந்தால், தலைமை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்படுகிறேன்.

இவ்வாறு அரசகுமார் கூறியுள்ளார்.

You'r reading ஸ்டாலின் அடுத்த முதல்வரா? பாஜக பிரமுகர் திடீர் பல்டி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை