ஸ்டாலினை புகழ்ந்த அரசகுமாருக்கு தடை.. பாஜக திடீர் நடவடிக்கை

by எஸ். எம். கணபதி, Dec 2, 2019, 18:34 PM IST
Share Tweet Whatsapp

ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார், கட்சியின் சார்பில் எந்த நிகழ்ச்சிலும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் நேற்று(டிச.1) திமுக பிரமுகர் பெரியண்ணன் இல்லத் திருமண விழா நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கி, திருமணத்தை நடத்தி வைத்தார். இதில், பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் கலந்து கொண்டு பேசும் போது, உள்ளாட்சிகளில் நல்லாட்சி கொடுத்து நாயகனாக வீற்றிருக்கும் என்றைக்கும் எங்களுக்கும் நிரந்த தலைவராக உள்ள அன்புத் தளபதியே... என்று ஸ்டாலினை புகழ்ந்தார்.

மேலும், எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின். அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். ஆனால் அவர் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். ஸ்டாலின் முதலமைச்சராகும் காலம் கட்டாயம் வரும் என பேசினார்.

இது சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. மேலும், அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்பது பாஜகவினருக்கே தெரிந்து விட்டது என்று திமுகவினர் பேசினர். இதைத் தொடர்ந்து, பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமார் நேற்றிரவே அவசரமாக மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், தான் யதார்த்தமாக பேசினேன் என்றும் அது பாஜகவின் கருத்து அல்லது என்றும் நீண்ட விளக்கம் அளித்தார்.

ஆனாலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு மாநில பாஜக பரிந்துரை செய்துள்ளது. பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அவரின் பேச்சு கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிய செயலாக கருதப்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தலைமைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது தேசிய தலைமையில் இருந்து பதில் வரும் வரை அவர் கட்சியின் சார்பில் எவ்வித நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் ஊடக விவாதங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டிருக்கிறது.


Leave a reply