அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியிருக்கிறது.
தீர்ப்பு குறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த தீர்ப்பு தொடர்பாக எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது. எங்கள் நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டால், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்வோம். எங்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. சுப்ரீம் கோர்ட் விதிகளில் இதற்கு இடம் உள்ளது என்று கூறியிருந்தார்.
எனினும், இந்த அமைப்பு இன்னும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை. வரும் 9ம் தேதி மறுஆய்வு மனுவுக்கான காலக்கெடு முடிவதற்குள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யும் என தெரிகிறது. இதற்கிடையே, அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, இந்த வழக்கின் மூல மனுதாரர் எம்.சித்திக் என்பவரின் மகனும், ஜமியத் உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மவுலானா சையத் அர்ஷ்ஹத் ரஷித் மனு தாக்கல் செய்துள்ளார்.