தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன்? மேலிடம் அவசர அழைப்பு..

by எஸ். எம். கணபதி, Dec 3, 2019, 11:08 AM IST

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, மாநில பாஜக தலைவர் பதவி காலியாகவே உள்ளது.

வழக்கமாக, பாஜகவில் மாநில தலைவர் பதவிக்கு பெரிய அளவில் போட்டி இருக்காது. கட்சியில் உள்ள சில சீனியர்களே டெல்லிக்கு சென்று பேசி ஒருவர் நியமிக்கப்பட்டு விடுவார். மூத்த தலைவர்களை மீறி எதுவும் நடக்காது என்பதால், மற்ற நிர்வாகிகள் டெல்லிக்கு படையெடுப்பதில்லை.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் இப்போது பாஜக மாநில தலைவர் பதவியே மிகப் பெரிய பதவியாகி விட்டது. டெல்லியில் சாதிப்பது ஒரு புறமிருக்க, தமிழகத்திலும் பாஜகவுக்கு தலையாட்டும் அரசு இருப்பதால் மாநில அரசிலும் பல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட ஒரு அமைச்சரைப் போல் விரைவில் செட்டிலாகி விடலாம் என்கிறார்கள்.

அதனால், காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவியை பிடிக்க மேலிடத் தலைவர்களிடம் எப்படி லாபி செய்வார்களோ அதே போல் பாஜகவிலும் லாபி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தலைவர் பதவிக்கு பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் என்று பல பெயர்கள் அடிபட்டு வந்தன. மூத்த தலைவர் இல.கணேசன் கூட, பாஜகவுக்கு தற்காலிக தலைவரை நியமித்து விட்டு, டிசம்பரில் தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டுமென்று அகில இந்திய தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால், மோடி, அமித்ஷா தலைமையேற்ற பிறகு, பாஜகவை பொருத்தவரை பார்ப்பதற்குத்தான் ஜனநாயகக் கட்சி. மற்றபடி, திமுக, அதிமுகவைப் போல் தலைமை எடுப்பதுதான் முடிவு. எனவே, அமித்ஷா யாரை முடிவு செய்திருக்கிறாரோ, அவரே தலைவராக வருவார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு பாஜக மேலிடம் அவசரமாக அழைப்பு விடுத்திருக்கிறது. இதையடுத்து அவர் டெல்லிக்கு சென்றிருக்கிறார். அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு, கட்சிக்குள் எழுந்துள்ளது. பாஜக என்றாலே அதில் பிராமணர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்தது.

அதை மாற்ற வேண்டுமென்பதற்காகவே நாடார் இனத்தைச் சேர்ந்த தமிழிசைக்கு தலைவர் பதவி அளிக்கப்பட்டது. தற்போது முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனுக்கு தலைவர் பதவி வழங்கினால், அதிமுக, திமுகவில் உள்ள அந்த இனத்தைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை இழுக்கலாம் என்று பாஜக மேலிடம் கருதலாம் என்று தெரிகிறது.


More Tamilnadu News