புதிய மாவட்டங்களில் மறுவரையறை எப்போது? மாநில தேர்தல் ஆணையர் விளக்கம்

New districts delimitation will be done after local body election

by எஸ். எம். கணபதி, Dec 3, 2019, 10:45 AM IST

உள்ளாட்சி தேர்தல் பழைய மாவட்டங்களின் அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், புதிய மாவட்டங்களுக்கு மறுவரையறை செய்யும் பணி, உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு நடக்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிச.27, 30 தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மறுவரையறை புகார்கள் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

தேர்தல் ஆணையரை தலைவராகவும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், பேரூராட்சி இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையர், சென்னை மாநகராட்சி ஆணையர், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்து ஆணையிட்டது. இந்த குழுவினர், வார்டு மறுவரையறை பணிகளை மாவட்ட அளவில் முடித்து மாவட்ட கலெக்டரால் முன்வடிவு தயாரித்தது. இதனடிப்படையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7 இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை கவனமுடன் பரிசீலித்து, இந்த கூட்டங்களின் வாயிலாக பெறப்பட்ட 19,547 மனுக்களில், 7,785 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதர மனுக்களுக்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டு ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டங்களை பொறுத்தவரை, இதற்காக வழங்கப்பட்ட அரசாணையிலேயே விளக்கம் தரப்பட்டுள்ளது. வார்டு வரையறை பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டதாலும், தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளதாலும், இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு வரையறை போன்ற ஏதாவது பணிகள் தேவைப்பட்டால், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னர், அதற்குரிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசாணையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

You'r reading புதிய மாவட்டங்களில் மறுவரையறை எப்போது? மாநில தேர்தல் ஆணையர் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை