ஊராட்சி பதவிகள் ஏலம்.. தேர்தல் ஆணையத்தில் சட்டபஞ்சாயத்து புகார்..

by எஸ். எம். கணபதி, Dec 10, 2019, 13:54 PM IST

கடலூர் மாவட்டம், நடுக்குப்பத்தில் ஊராட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சட்ட பஞ்சாயத்து புகார் கொடுத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்தும் மாநில தேர்தல் ஆணையத்திற்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது :

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ரூ.50 லட்சத்திற்கும், துணைத் தலைவர் பதவியை ரூ.15 லட்சத்திற்கும் ஏலம் விட்டதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேற்று(டிச.9) மதியம் 3.30 மணியளவில் செய்தி ஒளிப்பரப்பானது. ஏலம் விடப்படுவது குறித்த வீடியோ காட்சிகளும் காட்டப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நேரத்தில் இது ஓட்டுக்கு மறைமுகமாக பணம் தரும் தேர்தல் குற்றமாகும். எனவே, இதுகுறித்து உடனடியாக விசாரித்து, சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கீழ்கண்ட விஷயங்களை உள்ளடக்கி அறிவிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டுகிறோம்.

1. இதுபோன்று பதவிகளை ஏலம் விடுவது சட்டத்திற்குப் புறம்பானது

2. இதற்கும், ஓட்டுக்குப் பணம் வாங்குவதற்கும் வித்தியாசமில்லை

3. இதுபோன்று ஏலம் விடுபடப்படும் சம்பவத்தில் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தில் பங்கேற்றவர்கள் போன்ற அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்

4. தற்போது ஏலம் விடப்பட்ட நடுக்குப்பம் ஊராட்சியில் தேர்தலை ரத்து செய்யப்படும்.
இவ்வாறு புகார் மனுவில் செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை