பழ.கருப்பையாவுக்கு ஓய்வூதியம் தருவது அதிமுக.. நமது அம்மா நாளேட்டில் விமர்சனம்..

by எஸ். எம். கணபதி, Dec 13, 2019, 09:31 AM IST
Share Tweet Whatsapp

பழ.கருப்பையாவுக்கு திமுகவில் கிடைத்தது காயங்கள்தான். ஆனால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இது வரை வழங்கி வருவது அதிமுகதான் என்று நமது அம்மா நாளேடு விமர்சனம் செய்துள்ளது.அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது அம்மா பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள செய்தியில்..

திமுக கார்ப்பரேட் கம்பெனி என்று பழ.கருப்பையா சொல்லியிருக்கிறார். இதைத்தானே புரட்சித் தலைவர் முதல் எடப்பாடியார் வரை சொன்னார்கள். இதை உள்ளே போய்த்தான் உணர்ந்து கொண்டு வெளியே வருவேன் என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
கருணாநிதி என்றால் கடவுளா என்று புத்தகம் போட்டுவிட்டு, திமுக ரவுடி கும்பல் வீடு புகுந்து அவரை அடித்து துவைத்த நேரத்தில் கூடவே உறுதுணையாக இருந்து அவரை துறைமுகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கியது புரட்சித் தலைவி அம்மாவும் அதிமுகவும்தான்.

ஆனால், தன்னை சட்டமன்ற உறுப்பிரனாக்கி அழகு பார்த்த கழகத்தை இழித்தும், பழித்தும் பேசிவிட்டு, அடித்து உதைத்த கருணாநிதிக்கு ஆலாபனை பாட பழ.கருப்பையா போய் விட்டார். ஆனால், போன வேகத்தில் ஏராளமான காயங்களை இதயத்தில் ஏற்றுக் கொண்டு வெளியே வந்து, திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று கூறுகிறார்.
ஏற்கனவே காங்கிரஸ், ஜனதா, மதிமுக, அதிமுக, திமுக என்ற பயணங்கள் முடிவதில்லை என்ற கதையாக இருக்கும் கட்சிகளுக்கு போய் விட்டு வந்த பல கருப்பையா, தனது பொதுவாழ்வின் நீண்ட அனுபவத்தில் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்பதை வெகுதாமதமாக கண்டுபிடித்திருக்கிறார் என்றாலும் அவரது விமர்சனம் சத்தியமான உண்மையே.

அது சரி, திமுக அவருக்கு தந்ததெல்லாம் காயங்கள். அதிமுக அவருக்கு இன்று வரை வழங்கிக் கொண்டிருப்பது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஓய்வூதியம் என்றால் இப்போது அவருக்கு புரிந்திருக்கும் அதிமுவின் உன்னதம்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பழ.கருப்பையா, அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதே, துணிச்சலாக அந்த கட்சி மிகப் பெரிய ஊழல் கட்சி என்றும், எல்லாவற்றுக்கும் கமிஷன் வாங்கும் கட்சி என்றும் விமர்சனம் செய்தார். அப்போது அவரை அதிமுகவினர் தாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயங்கள்.

READ MORE ABOUT :

Leave a reply