மதத்தால் மக்களை பிரிக்கும் பாஜகவுக்கு மரணஅடி கிடைக்கும்.. முஸ்லிம் லீக் கண்டனம்..

by எஸ். எம். கணபதி, Dec 13, 2019, 09:05 AM IST
Share Tweet Whatsapp

மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர் என்று வி.எம்.எஸ்.முஸ்தபா கூறியுள்ளார்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 9ம் தேதி வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜ கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இம்மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 124 ஓட்டுகள் எதிராகவும், 99 ஓட்டுகள் ஆதரவாகவும் பதிவாகின. இதனால், தேர்வுக்குழுவுக்கு அனுப்புவது நிராகரிக்கப்பட்டது.

எதிர்கட்சிகள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை வெற்றி பெற வைத்து, பெரிய இமலாய சாதனையை செய்த்தது போன்று பாஜகவினர் பேசி வருவது வேதனை அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் கட்டமைப்பை சீர்குலைக்கும் செயலை தொடர்ந்து செய்து வரும் பாஜகவினர் செயல் அனைத்து தரப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பாஜக அரசின் செயலை கண்டித்து வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. நாட்டில் பல துறைகளில் தோல்வியை சந்தித்து வரும் மோடி அரசு தொடர்ந்து மக்களை திசை திருப்பும் செயலாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் பாஜகவின் செயலுக்கு வருங்காலங்களில் மக்கள் மரண அடி கொடுக்க தயாராகி விட்டனர். மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு முஸ்தபா கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

READ MORE ABOUT :

Leave a reply