பிரிட்டனில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி, 368 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலக வேண்டுமென்று, பிரிட்டனில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர். அதைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கு சாதகமான அம்சங்களுடன் ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து விட்டு, வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
வெளியேறுவதற்கான பிரக்சிட் தீர்மானத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் போனதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சிப் பிரதமர் தெரசா மே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதவி விலகினார். அதைத் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியில் நடந்த உட்கட்சி தேர்தலின் மூலம் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு பிரதமரானார். ஆரம்பத்தில் இருந்தே 21 கன்சர்வேடிவ் எம்.பி.க்கள், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியுடன் சேர்ந்து கொண்டு பிரக்சிட் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து, ஜான்சனாலும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரக்சிட் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இதையடுத்து, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் முடிவுகள் இன்று(டிச.13) தெரிய வரும். இதற்கிடையே, தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் நேற்று வெளியாகின. இதில், போரிஸ் ஜான்சன் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியே மீண்டும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. இக்கட்சிக்கு 368 தொகுதிகளும், தொழிலாளர் கட்சிக்கு 191 இடங்களும், ஸ்காட்டிஷ் நேஷனல் கட்சிக்கு 15, லிபரல் டெமாக்ரடிக் 13 இடங்கள் கிடைக்கலாம் என்று கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.