குடியுரிமை திருத்தச் சட்டம்: அதிமுக, பாமக துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டி

by எஸ். எம். கணபதி, Dec 18, 2019, 13:45 PM IST
Share Tweet Whatsapp

அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் நேற்று(டிச.17) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த எதிர்ப்பு ேபாராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக இன்று (டிச.18) அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர், மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:

திமுக கூட்டணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென ஏகமனதாக தீர்மானம் நிைறவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு என்ற தலைப்பில் வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும்.
இந்த சட்டம், நாட்டில் அமைதியைப் பறிப்பதாகவும், குழிபறிப்பதாகவும் உள்ளது. இந்த சட்டத்தில் அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டது ஏன்? அகதிகளாக வருபவர்களில் இஸ்லாமியர்களை தவிர்த்தது ஏன்? என்பதே எங்கள் கேள்வி.

அதிமுகவின் 11 ராஜ்யசபா எம்.பி.க்களும், பாமகவின் ஒரே எம்.பி.யும் இந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததால்தான், இந்த சட்டமே நிறைவேறியது. இது நிச்சயமாக தமிழினத் துரோகம். அனைத்து தமிழர்களும் இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர், நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:

இந்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே? மோடியும், அமித்ஷாவும், மத்திய அரசும் என்ன சொல்கிறார்களோ அதற்கு அடிபணிந்து, காலில் விழுந்து ஏற்றுக் கொள்வதுதான் எடப்பாடி பழனிசாமியின் வழக்கம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திமுக கூட்டிய அனைத்து கட்சி கூட்டம், சாத்தான் வேதம் ஓதுவது போல் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே? அவருக்கு எல்லாம் வேதம் ஓதுவது எங்கள் வேலையல்ல.

திமுகவை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே? இப்படி அவர் வீண்விதண்டவாதம் செய்வதை விட்டு, கடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன சாதனை செய்தது என்பதை மக்களிடம் போய் சொல்லலாம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயமாக திரும்பப் பெற மாட்டோம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறாரே? இங்கு மட்டுமல்ல, வடஇந்தியாவிலும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. நாங்கள் நடத்தும் பேரணி, நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏன் மக்கள் நீதிமய்யம் கமலை அழைக்கவில்லை?
இது திமுக கூட்டணி ஆலோசனை கூட்டம். கமல் என்னுடன் பேசினார். அடுத்த கட்டமாக, அரசியலுக்கு அப்பாற்பட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருக்கிறேன். நிச்சயமாக அப்ேபாது அவரையும் அழைப்போம். நாங்கள் நடத்தும் பேரணியிலும் கமல் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார். 

READ MORE ABOUT :

Leave a reply