ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்திற்கு நேற்று சென்றிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அதிமுக முக்கிய நிர்வாகிகளிடம் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று காலையில் அவர் சென்னைக்கு திரும்பினார். முன்னதாக, சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய ஆட்சியில் திமுக இடம்பெற்றிருந்த போது, இங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்று தரவில்லை? இப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டதாக ஸ்டாலின் பொய் கூறுகிறார். இலங்கை தமிழர்களுக்காக அதிமுக தொடர்ந்து போராடி வருகிறது. இலங்கை தமிழர்கள் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. எந்த மதத்தினருக்கும் சிக்கல் ஏற்படாது என்று பிரதமர் கூறியிருக்கிறார். இந்தியர்கள் யாருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தெளிவுபடுத்தி விட்டனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இலங்கை தமிழருக்கு அதிமுக துரோகம் இழைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தது முழுமையான பொய். இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்வதுபோல் நாடகம் ஆடிக் கொண்டிருக்க கூடிய கட்சி திமுக தான்.
இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த போது அவர் ெகாடுத்த விருந்தில் கலந்து கொண்டு பரிசு பொருட்களை கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வாங்கினார்கள். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க காரணமாக இருந்த திமுக, இப்போது இலங்கை தமிழருக்கு நன்மை செய்வதாக நாடகம் ஆடி வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா முதல்வராக இருந்த போது பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இப்போது அதை மீண்டும் வலியுறுத்துவோம்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு மனமே வரவில்லை. மக்களை சந்திக்கும் எண்ணமே இல்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை மிரட்டும் விதமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து நீதிமன்றம் சென்று வருகிறார்கள். மக்களிடையே அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே அதிகமாக செல்வாக்கு இருப்பதால் தேர்தலை சந்திக்க திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பயப்படுகின்றன.
ஸ்டாலினுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.