அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்க தொடங்கி உள்ளன. அவை அழகாக இருந்தாலும், வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கத்தான் போகிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 7 அடி உயரத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே நிறுவப்பட்டுள்ள இந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும், அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடாக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்டனர்.
பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அரிதாரம் பூசிய சிலர் மக்களை காக்க வந்த ரட்சகர்கள் போல வீரவசனம் பேசுகின்றனர். மக்களை காப்பாற்றப் போவது நாங்கள் தான் என்பவர்களின் பேச்சு விரைவில் புஸ்வாணமாகும். அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்க தொடங்கி உள்ளன.
அவை பார்க்க அழகாக இருந்தாலும், அவை வெடித்து சிதறுவதை நம் கண்முன்னே பார்க்கத்தான் போகிறோம். ஜெயலலிதா உயிரோடு இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள். அதிமுகவை வெல்ல நினைத்தவர்களின் கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கி கிடக்கின்றன.
அதிமுகவின் வெற்றியை தடுக்கவும் இடையில் புகுந்து களவாடவும் சிலர் சதி செய்கின்றனர். அவர்களின் வஞ்சக வலையை அறுத்தெறிந்து கட்சியையும் ஆட்சியையும் ஒற்றுமையாக கட்டிக் காப்போம். எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அது எப்போது வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி காண்போம்” என்றார்.