ஜெயலலிதாவின் பிறந்தாளையொட்டி நடத்தப்பட்ட, அம்மா ஸ்கூட்டர்கள் வழங்கும் விழாவில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நேற்று அதிமுகவினரால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதன்படி, நேற்று காலை அதிமுக தலைமை அலுவகத்தில் ஜெயலலிதாவின் உருவ சிலை திறக்கப்பட்டது. தொடர்ந்து, அதிகாரப்பூர்வமாக அம்மா நாளிதழ் வெளியிடப்பட்டது.
மேலும், நேற்று மாலை முதல்கட்டமாக ஆயிரம் பயனாளிகளுக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் பங்கேற்க வந்தார். ஆனால், தமிழிசை தாமதமாக வந்ததால், பாதுகாப்பை கருதி அவருக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுத்துவிட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காவல் துறையினரிடம் தமிழிசை நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பிறகு, தமிழிசையை விழாவில் கலந்துக் கொள்ள காவல் துறையினர் அனுமதித்தனர்.